யாழ்ப்பாணத்தில் ஆள்மாறாட்ட வழக்கில் சட்டத்தரணி ஒருவர் கைது.

9 months ago


ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் யாழ். உடுவில் பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணியொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பிராந்திய விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைதான சட்டத்தரணி சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், சட்டத்தரணியின் அலுவலகத்தில் இருந்த மூன்று கணிணிகளையும் பகுப்பாய்வு விசாரணைக்குட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இத்தாலியைச் சேர்ந்த பெண்ணொருவர், யாழ்ப்பாணத்துக்குத் திரும்பி விவாகரத்துக்கு விண்ணப்பிக்கச் சென்றபோது, அவர் ஏற்கனவே விவாகரத்துப் பெற்றுள்ளார் என்று தரவுகள் வெளிக்காட்டியுள்ளன.

அந்தப் பெண் அதுவரை விவாகரத்துக்கு விண்ணப்பிக்காத நிலையில், இது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

பொலிஸ் விசாரணைகளில், உடுவில் பகுதியில் உள்ள சட்டத்தரணியொருவர் கனிஷ்ட சட்டத்தரணிகள் மூலமாக ஆள்மாறாட்டம் செய்து, மேற்படி தம்பதியர்கள் விவாகரத்துப் பெற்றுக்கொள்வதாக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை தெரியவந்தது.

இதையடுத்து, இது தொடர்பில் குறித்த சட்டத்தரணியின் அலுவலகத்தில் சில வாரங்களுக்கு முன்னர் பொலிஸாரால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.