ஹர்தீப் சிங் நிஜ்ஜாரில் கொலை சம்பவத்தை அடுத்து, இந்தியா - கனடாவுக்கிடையிலான உறவில் மீண்டும் விரிசல்

6 months ago



ஹர்தீப் சிங் நிஜ்ஜாரில் கொலை சம்பவத்தை அடுத்து, இந்தியா - கனடாவுக்கிடையிலான உறவில் மீண்டும் விரிசல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கனடாவில் உள்ள இந்திய தூதர்களை திரும்பப் பெறுவதாக இந்தியா அதிரடி அறிவிப்பு ஒன்றை நேற்று திங்கட்கிழமை (14) வெளியிட்டது.

மேலும் இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதர்கள் 6 பேரையும் வரும் 19ஆம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேறவும் இந்தியா உத்தரவிட்டுள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் 18 ஆம் திகதி, கனடாவில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையில் இந்திய அரசாங்கத்துக்கு தொடர்பு உள்ளதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கனடா- இந்தியா உறவில் விரிசல் ஏற்பட்டது.

பின்னர் இந்த விவகாரம் சற்று தணிந்த நிலையில் தற்போது மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது.

அதாவது, நிஜ்ஜார் கொலையில் கனடாவுக்கான இந்தியத் தூதருக்கு தொடர்பு உள்ளதாக கனடா குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த அக்டோபர் 11ஆம் திகதி லாவோஸ் நாட்டில் நடந்த ஆசிய மாநாட்டில் பிரதமர் மோடியும் ஜஸ்டின் ட்ரூடோவும் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது.

இந்த சந்திப்பில் கனடா மக்களின் பாதுகாப்பு குறித்து மோடியிடம் பேசியதாக ட்ரூடோ தெரிவித்தார்.

ஆனால் அவர் அப்படி எதுவும் மோடியிடம் பேசவில்லை என்று இந்தியா மறுப்பு தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து கனடாவில் இந்திய அரசாங்கத்தின் வன்முறை பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்திய தூதர்கள் பணியாற்றினர் என்பதற்கான சான்றுகளை கனடா பொலிஸார் சேகரித்துள்ளதாக, கனடா தெரிவித்த நிலையில் இது நிலைமையை இன்னும் மோசமடைய வைத்துள்ளது