இலங்கை ஜனாதிபதி வடமாகாண விஜயத்தின்போது நீண்ட காலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு -- அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி

3 months ago



இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸா நாயக்கவின் வடக்கு மாகாண விஜயத்தின்போது, இந்த மாகாண மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள பல பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதியளித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற் கொண்ட அவர் நேற்று செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு இதனைக் குறிப்பிட்டார்.

அதற்கமைய, எதிர்வரும் 31 ஆம் திகதி ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனவும், அன்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் ஜனாதிபதி பங்கேற்பார் எனவும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு மாகாண மக்கள் தங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்காகத் தேசிய மக்கள் சக்தியைத் தெரிவு செய்தமைக்கு மதிப்பளிக்கும் வகையில் ஜனாதிபதியின் இந்த விஜயம் அமைகின்றது.

இதேவேளை, கடந்த கால அரசாங்கங்கள் தேர்தல்களை பிற்போட்டிருந்தன.

தற்போது உள்ளுாராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டதிருத்தம் நாடாளுமன்றத்தில்  முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது, நீதிமன்றங்களில் சில மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

எனினும், அவற்றினால் தேர்தலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என நம்புகின்றோம்.

அதேநேரம், ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் அல்லது நான்காம் வாரத்தில் உள்ளுாராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கின்றோம்." - என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரரும் கலந்துகொண்டு கருத்துரைத்தார்.