ஜனவரி 1 முதல் 29 ஆம் திகதி வரை இலங்கையில் 149 வாகன விபத்துக்களில் 156 பேர் உயிரிழந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவிப்பு

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 149 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், 156 பேர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு போக்குவரத்து பிரிவு பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஞ் ரனகல தெரிவித்தார்.
வாகன விபத்துக்கள் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வெள்ளிக்கிழமை (31) இலங்கை மருத்துவர் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2024ஆம் ஆண்டு வரை நாட்டில் 84 இலட்சம் 54,513 வாகனங்கள், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் அதிகளவானவை மோட்டார் சைக்கிள்களாகும்.
விபத்துகளால் 2022ஆம் ஆண்டு 2,540 மரணங்களும், 2023ஆம் ஆண்டு 2,241 உயிரிழப்புகளும், 2024ஆம் ஆண்டு 2,381 மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு கடந்த ஐந்து வருட காலப் பகுதியில் பாரதூரமான சேதங்களை ஏற்படுத்திய 33,259 விபத்துகள் பதிவாகியுள்ளன.
இந்த விபத்துக்கள் யாவும் விபத்துக்குள்ளானவர் உடல் அவயங்களை இழந்ததும் மற்றும் எழுந்து நடமாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதுமான விபத்துகளாகும்.
இதேவேளை 2024ஆம் ஆண்டு 843 பாதசாரிகள், 738 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், 157 வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணித்தோர், 167 சாரதிகள், 309 பயணிகள், 160 துவிச்சக்கர வண்டி செலுத்துநர்கள் மற்றும் ஏனையோர் 6 பேர் என விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் பாதசாரிகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களே அதிகளவில் விபத்துகளால் மரணித்துள்ளனர்.
விபத்துகளின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு அவற்றை குறைக்கும் நோக்குடன் பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் சிறப்பு போக்குவரத்து கண்காணிப்பு செயற்றிட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எவ்வாறெனினும், அதிகாரிகள் விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் செயற்பட்டாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி அது சாத்தியப்படாது.
வாகனங்களை செலுத்தும்போது சாரதிகள் தமது பொறுப்பை உணர்ந்து செயற்படுவது அவசியம்.
குறிப்பாக, மோட்டார் சைக்கிள் செலுத்துநர்களே விதிமுறைகளை மீறி வாகனங்களை செலுத்துவதை காணக்கூடியதாக உள்ளது.
அவதானத்துடன் செயற்படுங்கள் பொறுமையின்மையால் கவனக் குறைவாகவும், அதிக வேகத்துடனும் வாகனம் செலுத்துவது விபத்துகளுக்கு வழிவகுக்கலாம்.
வாகன மேலதிக உதிரிப்பாகங்களை அகற்றும் விசேட திட்டத்துக்கமைய பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையின்படி, மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக நாடளாவிய ரீதியில் பொலிஸார் போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதசாரிகளும் பாதையில் பயணிக்கும் போதும், வீதிகளை கடக்கும் போதும் அவதானத்துடன் செயற்படுங்கள்.
இம்மாதம் கடந்த 29ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 149 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், 156 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 49 விபத்துகளையும் 46 உயிரிழப்புகளையும் குறைத்துக் கொள்ள முடிந்துள்ளது என்றார்.
இதன்போது இலங்கை மருத்துவர் சங்கத்தின் விசேட வைத்திய நிபுணர் சுரந்த பெரேரா கருத்து தெரிவிக்கையில்,
தொற்று நோய்களை விட எமது கவனக்குறைவால் ஏற்படக்கூடிய விபத்துகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 1.19 மில்லியன் பேர் வாகன விபத்துகள் காரணமாக உயிரிழக்கின்றனர்.
5 தொடக்கம் 29 வயதுக்கு இடைப்பட்ட இளம் வயதினரே இவ்வாறு அதிகளவில் விபத்துக்களுக்கு ஆளாகின்றனர். இது கவலைக்குரிய விடயமாகும்.
வளர்ந்து வரும் நாடுகளில் உரிய நவீனத்துவத்துக்கமைய வீதிகள் அமைக்கப்படாமை, உரிய தரத்துக்கமைய வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாமை உள்ளிட்ட பல தொழில்நுட்ப காரணங்களால் விபத்துக்கள் சம்பவிக்கின்றன.
எதிர்வரும் காலங்களில் லொறியின் உடற்பாகத்தில் வடிவமைக்கப்படும் பேருந்துகளை கொள்வனவு செய்ய முடியாது.
உரிய தரத்துக்கமைய வடிவமைக்கப்பட்ட பேருந்துகளை மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும்.
மேலும், இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களில் சிக்கி பலர் உடல் அவயங்களை இழக்க நேரிடுவதுடன், வாழ்நாள் முழுவதும் எழுந்து நடப்பதிலும் சிக்கல்கள் ஏற்படலாம்.
இதனால் விபத்துக்கு ஆளாகியவர் மாத்திரமல்ல, அவரது முழு குடும்பமும் பொருளாதார சுமை உள்ளிட்ட பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
