2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 109 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 109 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
நேற்று மாலை 6.10 மணிக்கு இடம்பெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஆளும் கட்சியைச் சேர்ந்த 159 பேரில் நேற்று சபை அமர்வில் கலந்துகொண்ட 154 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் ஆதரவாக வாக்களித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
அத்துடன் சுயேச்சைக் குழுவின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், தயாசிறி ஜயசேகர ஆகியோரும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தனர்.
2025 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது 'வரவு செலவுத் திட்ட உரை' நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் கடந்த 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பெப்ரவரி 18ஆம் திகதி முதல் நேற்று (25) வரை, 7 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்) மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது.
குழு நிலை விவாதம் பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 19 நாட்கள் இடம்பெறவுள்ளது.
இதற்கமைய 2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மார்ச் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
