இந்தியப் பிரதமர் இலங்கை ஜனாதிபதியுடன் ஒரு ஒப்பந்தத்தை போட வேண்டும் -- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இந்தியப் பிரதமர் மோடி இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவோடு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்தை போட வேண்டும்.
அந்த ஒப்பந்தத்தின் மூலமே தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்னையை தீர்க்க முடியும்.
இத்தகைய ஒப்பந்தத்தினால் யாழ்ப்பாண தமிழ் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற உறுதியை இந்திய அரசு தர வேண்டும்.
அந்த வகையில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பதன் மூலமே தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்-
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நடுக்கடலில் துப்பாக்கிச் சூடு நடத்தி நாகப்பட்டினம் மயிலாடுதுறை காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து அட்டூழியம் செய்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் கடுமையாக காயமடைந்த இரண்டு மீனவர்கள் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் காயடைந்த 3 மீனவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கை கடற்படையினரின் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் தகுந்த சிகிச்சை பெற்று தமிழகம் திரும்ப உரிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
2024ஆம் ஆண்டில் மட்டும் இலங்கை கடற்படை 72 மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்தும் 554 தமிழக மீனவர்களையும் கைது செய்தும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பலமுறை கடிதம் எழுதியும் இப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை.
ஆனால் பா.ஜ.கவினர் கச்சதீவு குறித்து பேசி பிரச்சினையை திசை திருப்பும் முயற்சியை செய்து வருகின்றனர்.
தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கும் கச்சதீவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அனைத்து மீனவர்களும் நன்கு அறிவார்கள்.
இராமேஸ்வரத்திலிருந்து சர்வதேச கடல் எல்லை 12 கடல் மைல் தூரத்திலும் கச்சதீவு என்பது 14 கடல் மைல் தூரத்திலும் உள்ளது.
இந்நிலையில் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
தமிழக மீனவர்களை பொறுத்தவரை இந்திய கடல் பகுதியில் மீன்வளம் இல்லாத நிலையில் இலங்கை கடல் பகுதியில் மீன்வளம் அதிகமாக இருப்பதாலும் அங்கே மீன் பிடிக்க செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் தொடர்ந்து இருந்து வருகிறது.
வல்லரசாக இருக்கிற இந்தியாவின் பிரதமரான மோடி சின்னஞ்சிறிய நாடான இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவோடு பேச்சு வார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்தை போட வேண்டும்.
அந்த ஒப்பந்தத்தின் மூலமே தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்னையை தீர்க்க முடியும்.
இத்தகைய ஒப்பந்தத்தினால் யாழ்ப்பாண தமிழ் மீனவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்ற உறுதியை இந்திய அரசு தரவேண்டும்.- என்றுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
