இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடையாது -- வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் நிலுக கதுருகமுவ தெரிவிப்பு

3 months ago



இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வொன்று கிடையாது.

தீர்வை நோக்கிய பேச்சுவார்த்தைகளே தற்போதும் இடம்பெற்று வருகின்றன.

அதற்கமைய இராஜதந்திர மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் நிலுக கதுருகமுவ தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் காயமடைந்தமை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக பத்தரமுல்லையிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் புதன்கிழமை (29) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை குறித்து நீண்ட காலமாக அதிகாரிகள் மட்டத்திலிருந்து அரச தலைவர்கள் மட்டம் வரை இந்தியாவுடன் மிக ஆழமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அவை தவிர இரு நாட்டு கடற்றொழில் அமைச்சுக்களின் செயலாளர்களால் தலைமைத்துவம் வகிக்கப்படும் ஒன்றித்த செயற்குழுவும் காணப்படுகிறது.

2015ஆம் ஆண்டு இக்குழு நியமிக்கப்பட்டது. இதுவரை 6 சந்தர்ப்பங்களில் இந்த குழு கூடியுள்ளது.

இறுதி கலந்துரையாடல் கடந்த ஆண்டு ஒக்டோபர் 29ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்றது.

இதன் போது இவ்வாறான சகல விடயங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும்.

அந்த வகையில் தீர்வை நோக்கிய பேச்சுவார்த்தைகளே தற்போதும் இடம்பெற்று வருகின்றன.

இது ஒரு நாளில் நிறைவடையும் பிரச்சினையல்ல.

இந்த பிரச்சினைக்கு தீர்வினைக் காண்பதற்காக இராஜதந்திர மட்டத்தில் உரிய நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்திருக்கின்றோம்.

ஆனால் இதற்கு தீர்வு என்ற ஒன்று இல்லை.

இழுவைப் படகு முறைமை என்பது இலங்கையில் மாத்திரமின்றி இந்தியாவிலும் தடை செய்யப்பட்ட ஒரு மீன்பிடி முறைமையாகும்.

எனினும் அந்த முறைமையைப் பயன்படுத்தியே இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடி நடவடிக்கைளில் ஈடுபடுகின்றனர்.

சட்டதுடன் தொடர்புடைய தரப்புக்களின் ஊடாகவே கைதுகள், அதனையடுத்த சட்ட நடவடிக்கைககள் முன்னெடுக்கப்படுகின்றன.

வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனையும் வழங்கப்படுகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சு இந்த சம்பவம் தொடர்பில் எம்மிடம் நேரடியாக கேள்வியெழுப்பவில்லை.

எனினும் டில்லியிலுள்ள பதில் உயர்ஸ்தானிகரை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இவ்வாறான சம்பவம் மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயமும் இது குறித்து அறிவித்துள்ளது என்றார்.

அண்மைய பதிவுகள்