எம்.பி பொ.கஜேந்திரகுமாருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி, அவரது செயற்பாடுகளை முடக்குவதற்கு பொலிஸ் மட்டத்தில் கடும் முனைப்பு

2 months ago



யாழ்ப்பாணம் - தையிட்டிப் பகுதியில் பொதுமக்களின் காணியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை அகற்றப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார்.

ஜனாதிபதி அநுரவின் தலைமையில் ஜனவரி மாதம் 31ஆம் திகதி நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் அவர் இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதையடுத்து, தையிட்டி விகாரையை இடிப்பதற்கு ஒன்றுபடுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுமக்களை அழைப்பது போன்று ஒரு துண்டுப்பிரசுரம் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது.

அந்தத் துண்டுப்பிரசுரத்துக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும், அதுபோலியானது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் உடனடியாகவே தெளிவுபடுத்தலை வழங்கியிருந்தார்.

எனினும், இந்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்குத் தொடர்ந்து அவருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.

இதன்படி, இன்று காலை 9 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ள நிலையில், அதற்குப் பின்னர் வாக்குமூலம் பெறுவதற்காக முற்பகல் 10 மணியளவில் பலாலி பொலிஸ் நிலையத்துக்கு வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.

இதனால், அவரை முடக்குவதற்காகவும். அச்சுறுத்துவதற்காகவுமே பொலிஸார் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பலரும் குற்றஞ் சாட்டியுள்ளனர்.